Welcome

Welcome By Online Tutorial- Advance MS Office Excel - Word - Access - Power Point - Batch File Tips and Tricks, How to Use Indirect function, How to Apply Image Vlookup, How to Apply Double Vlookup and many more advance tips and tricks subscribe our video channel and get more new updated video https://www.youtube.com/user/renuka1971

ஆரோக்கியப் பெட்டகம்: வாழைப்பூ


ஆரோக்கியப் பெட்டகம்: வாழைப்பூ






மருத்துவக் குணமும் மகத்தான மணமும் கொண்டது வாழைப்பூ. ஆனாலும், அது சமையலில் அரிதாகவே இடம்பெறுகிற ஒன்றாக இருக்கிறது.  வாழைப்பூவை சமைக்கத் தெரியாதவர்கள் ஒரு பக்கம் என்றால், வாழைப்பூவை ஆய்ந்து, சுத்தப்படுத்தி சமைப்பதற்கு அலுத்துக் கொண்டு அதைத்  தவிர்ப்பவர்கள் இன்னொரு பக்கம். அறியாமையையும் அலுப்பையும் தவிர்த்து வாழைப்பூவை அடிக்கடி சமையலில் சேர்த்துக் கொள்கிறவர்களின்  வீடுகளில் ஆரோக்கியம் தாண்டவமாடும் என்பதில் சந்தேகமில்லை. வாழைப்பூவின் குணநலன்களை விளக்குவதோடு, அதை வைத்து சூப்பர்  உணவுகளையும் செய்து காட்டுகிறார் சஞ்சீவனம் ஆயுர்வேத தெரபி மையத்தின் மருத்துவ அதிகாரி விஜயகுமார்.

‘‘நமது உணவில் காய்கறிகள் முக்கிய அங்கம் வகிக்கின்றன என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இந்திய உணவு வகைகளில் எப்போதுமே  காய்கறிகள் ஒரு பகுதியாவது இடம்பெறுகின்றன. பெரும்பாலும் நமது உணவில் ஒன்றுக்கும் மேற்பட்ட காய்கள் இடம்பெறுகின்றன. காய்கள் சேர்ந்த  உணவுக் கலவை அல்லது தொட்டுக்கொள்ளும் ஒரு உணவாக காய்கறி இடம்பெறுகிறது. சில காய்கறிகள் பொதுவாக நமது உணவில் வழக்கமாக  தினசரி இடம் பெறுகின்றன. சில காய்கறிகள் பொதுவாக சமைக்கப்படுவதே கிடையாது. வாழைப்பூ, பெரும்பாலான வீடுகளில் விரும்பப்படும்  உணவாகும்.

இருப்பினும் மற்ற காய்கறிகளான கேரட், முட்டை கோஸ், பீட்ரூட், பாகற்காய் உள்ளிட்ட காய்களைப் போல இது பயன்படுத்தப்படுவதில்லை.  வாழைப்பூவில் என்ன சமைப்பது என்று பலருக்குத் தெரியாததுதான் காரணமாகும். சமையல் பயன் பாட்டுக்கு அப்பால், உணவு வகைகள் சிறந்த  மருத்துவக் குணங்களைக் கொண்டதாகவும் திகழ்கின்றன. வாழைப்பூவில் சில உணவு வகைகள் தயாரிக்கத் தெரிந்து கொள்வதற்கு முன்பாக  வாழைப்பூவில் உள்ள உடலுக்கு நன்மை தரும் விஷயங்களை தெரிந்து கொள்வோம்.ஆயுர்வேத மருத்துவத்தில் பல காய்கறிகள் பற்றிய குறிப்புகள்  இருந்தாலும், அவற்றில் முதன்மையானதாக ‘கதளி’ எனப்படும் வாழைப்பூ முக்கிய இடம் பிடித்துள்ளது.

இதில் உள்ள நன்மை தரும் விஷயங்களால் இதை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. வாழைப்பூவில் அதிக காரம் மற்றும்  மசாலா பொருட்கள் சேர்க்காமல் சமைத்துச் சாப்பிடுவது மிகவும் பயனளிக்கக் கூடியது.

குளிர்ச்சி தரும்... நார்ச்சத்து நிறைந்தது!

வாழைப்பூ சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். ஆயுர்வேதத்தில் இது ‘பித்த சம்ஹா’ (உடலில் பித்தத்தைத் தணிக்கும் குணம் கொண்டது)  எனப்படுகிறது. இதை உரிய வகையில் சமைத்து சாப்பிடும்போது உஷ்ணத்தால் ஏற்படும் பலவித நோய்களை - அதாவது, சிறுநீர் சார்ந்த நோய்கள்,  பெண்களுக்கு வெள்ளைப்படுதல் உள்ளிட்டவற்றைக் குணப்படுத்த உதவுகிறது. வாழைப்பூவில் அதிக நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கலைப் போக்க  உதவுகிறது. கொழுப்புச் சத்து குறைவாக இருப்பதால் ஆரோக்கியமான உடல் எடை அதிகரிப்புக்கு உதவுகிறது.

மருந்து தயாரிப்பில் வாழைப்பூ

ஆயுர்வேத மருத்துவ தயாரிப்புகளில் குறிப்பாக கதளி கல்ப ரசாயனம் தயாரிக்க - அதாவது, பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பமேகம், மாதவிடாய்  பிரச்னைகள் குணமாக பரிந்துரைக்கப்படுகிறது. இது உணவுடன் சேர்த்து சாப்பிட வேண்டிய பொருளாகும். ‘கடல்யாடி கிரிதம்’ எனப்படும் சிறப்பு  எண்ணெய் தயாரிப்பில் வாழைப்பூ பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த எண்ணெய் சர்க்கரை நோயாளிகள் மற்றும் அவர்களுக்கு ஏற்படும்  நோய்களைக் குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.

பெண்களுக்கு நல்லது

கெட்டித் தயிருடன் சேர்த்து எடுக்கப்பட்ட வாழைப்பூ ஜூஸ் மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் பிடிப்புகளுக்கு நிவாரணமாகும். அத்துடன் அப்போது  ஏற்படும் அதிகபட்ச உதிரப் போக்கைக் கட்டுப்படுத்தவும் பரிந்துரைக்கப்படுகிறது. மகளிர் சார்ந்த பல்வேறு உடல் உபாதைகளுக்கு மிகச்சிறந்த தீர்வாக  வாழைப்பூ இருப்பதால், பெண்கள் இதை தங்கள் உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச் சிறந்த உணவு

நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச் சிறந்த உணவாக வாழைப்பூ கருதப்படுகிறது. சர்க்கரை நோய் மற்றும் அதனால் ஏற்படும் குடல்  புண், சிறுநீர் பிரச்னைகளுக்கு இது மிகச் சிறந்த நிவாரணம் அளிக்கக்கூடியது. வேகவைத்த வாழைப்பூ பொரியல் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச் சிறந்த  உணவாகும். இதில் உள்ள ஹைபோகிளைசிமிக் எனும் ரசாயனம் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச் சிறந்தது. வாழைப்பூ சூப் சாப்பிடுவதன் மூலம் நல்ல  பலன் கிடைக்கும். அத்துடன் வயிற்றுப்போக்கு உள்ளவர்களுக்கும் ஏற்றது.

சில எச்சரிக்கைகள்

வாழைப்பூ வீட்டில் சமைக்கப்பட்டதாக இருத்தல் அவசியம். ஒருவேளை இது ஒரு உணவாக இருந்தால், ஏற்கனவே தயாரிக்கப்பட்டு அதை சாப்பிட்டு  நல்ல வரவேற்பைப் பெற்றதாக இருக்க வேண்டும். அதேபோல எந்த உணவும் அளவோடு சாப்பிட்டால்தான் அதன் முழுப் பலனும் கிடைக்கும். அந்த  விஷயத்தில் காய்கறிகளையும் அளவோடு சாப்பிட வேண்டும். உடலுக்கு நல்லது என்று பரிந்துரை செய்துவிட்டார் டாக்டர் என்பதற்காக அதை  அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது கூடாது.

எப்படித் தேர்ந்தெடுப்பது?

வாழைப்பூ புதிதாக மலர்ச்சியுடன் இயற்கை தன்மை கெடாமல் இருக்க வேண்டும். வெளிப்பகுதி மிகவும் வழவழப்பாக இருத்தல் வேண்டும்.  தோலிலிருந்து வாழைப்பூ இதழ்களை எடுப்பது சிரமமாக இருத்தல் கூடாது. உள்புற இதழ்கள் நன்கு மூடியிருந்தால் அது சிறந்த வாழைப்பூவாகும்.

வாழைப்பூ தோரண்

என்னென்ன தேவை?

வாழைப்பூ - 6, தேங்காய் - 250  கிராம், பச்சை மிளகாய் - 20  கிராம், மஞ்சள் தூள் - 10 கிராம், சீரகம் - 20 கிராம், தேங்காய் எண்ணெய் - 25 மி.லி.,  கறிவேப்பிலை -  5 கிராம், உப்பு -  தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

1.    வாழைப்பூவை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். பிறகு அத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அடிப்பாகம் செம்பிலான  பாத்திரத்தில் (காப்பர் பாட்டம்) நன்கு வேகவைத்து மூடி  வைக்கவும்
2.    இத்துடன் சிறிதளவு மஞ்சள் தூள், கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு சேர்த்து வேக வைத்து ஆற விடவும்.
3.    தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றை கொர கொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
4.    இந்த கலவையை வேகவைத்த வாழைப்பூவுடன் சேர்த்து கலக்கவும்.
5.    பிறகு அதன்மீது சிறிதளவு தேங்காய் எண்ணெயை மணத்துக்காக ஊற்றவும். (அடுப்பில் இருந்து இறக்கி பிறகு).

வாழைப்பூ இலை அடை

என்னென்ன தேவை?

அடை தயாரிக்க...

கோதுமை மாவு - 150 கிராம், எண்ணெய் -  5 கிராம், உப்பு - தேவையான அளவு, தண்ணீர் - 150 மி.லி.

பூரணத்துக்கு...

வாழைப்பூ - 300  கிராம், வெங்காயம் -  50  கிராம்,  பச்சை மிளகாய் - 10  கிராம்,   இஞ்சி - 5  கிராம்,  மஞ்சள் தூள் - 5 கிராம், கொத்தமல்லி தூள் - 5  கிராம், நல்லெண்ணெய் - 10 மி.லி., உப்பு -  தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

கோதுமை மாவுடன் உப்பு, எண்ணெய், தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றவும் அதில் பச்சை மிளகாய்,  வெங்காயம், மஞ்சள் தூள், இஞ்சி, கொத்தமல்லி தூள் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். அத்துடன் உப்பு, நறுக்கிய வாழைப்பூவை சேர்த்து வதக்கி  பூர்ணம் தயாரிக்கவும். அடை தயாரிக்க பிசைந்த கோதுமை மாவை சரி பகுதிகளாக பிரித்து வைக்கவும். கோதுமை மாவை வாழை இலையில்  தட்டவும். அத்துடன் பூரணத்தை சேர்த்து பாதியாக மூடவும். இதை 20 நிமிடங்கள் ஆவியில் வேக வைக்கவும். சூடாக இலையுடன் பரிமாறவும்.

வாழைப்பூ கட்லெட்

என்னென்ன தேவை?

ஆய்ந்து சுத்தம் செய்து நறுக்கிய வாழைப்பூ - 100  கிராம், உருளைக்கிழங்கு - 50 கிராம், வெங்காயம் - 50 கிராம்,  பச்சை மிளகாய் - 10 கிராம், இஞ்சி  - 10 கிராம், பிரெட் தூள் - 5  கிராம், உப்பு - தேவையான அளவு,  கரம் மசாலா - 2  கிராம்,  மிளகுத்தூள் - 5 கிராம்,  நல்லெண்ணெய் - 20 மி.லி.,  சீரகத் தூள் - 10 கிராம், மஞ்சள் தூள் - 2 கிராம், கறிவேப்பிலை - அரைக் கைப்பிடி அளவு, கொத்தமல்லி - சிறிது.

எப்படிச் செய்வது?

1.    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றவும் அதில் மிளகாய், வெங்காயம், மஞ்சள் தூள், இஞ்சி, சீரகத் தூள், மிளகுத் தூள், கரம் மசாலா,  கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு வதக்கவும்.
2.    சிறிதளவு தண்ணீர் சேர்த்து, உப்பு, வாழைப்பூவை சேர்க்கவும். இத்துடன் வேகவைத்திருந்த உருளைக்கிழங்கை மசித்துப்போடவும்.
3.    இந்த கலவையை நன்கு கிளறி உருண்டைகளாக செய்து அதை பிரெட் தூளில் தோய்த்துக் கொள்ளவும்.
4.     பிறகு இதை கனமானதாக தட்டி அதை நான் ஸ்டிக் கல்லில் இருபுறமும் சிவக்கும்படி பொரிக்கவும்.
5.    பிறகு இதன் மீது கொத்தமல்லி இலை தூவி, புதினா சட்னி அல்லது தக்காளி சாஸுடன் சாப்பிட பரிமாறவும்.